PART-2 திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம் கபளீகரம்!!

திருநீர்மலை பச்சைமலையின் ஒரு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தைத் தனியார் சிலர் கம்பி வேலிகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர் ஒருவேளை கட்டிங் வாங்கி இருப்பார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையில், பச்சைமலை உள்ளது. இம்மலையை சுற்றி சானடோரியம், மெப்ஸ், மீனாட்சி நகர், துர்கா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை ஆகியவை உள்ளன.

இந்நிலையில், துர்கா நகர் பிரதான சாலையை ஒட்டியுள்ள, பச்சை மலையின் அடிப்பகுதியில், 1.5 ஏக்கர் அரசு நிலம் காலியாக உள்ளது. இந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்ததோடு, ‘கேட்’ போடுவதற்கு இரண்டு புறமும் பில்லர் அமைத்துள்ளனர்.

மலையின் கீழ் பகுதியில், கண்ணெதிரே ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அறிந்து, அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு கலெக்டர் முதல் வருவாய் துறையினர் வரை, பல அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
அப்படியிருந்தும், ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலத்தின் மதிப்பு, 10 கோடி ரூபாய்.

இதுகுறித்து, திருநீர்மலையை சேர்ந்த ஆர்.எஸ். சுபாஷ், 64, கூறியதாவது மலையின் கீழ் பகுதியில் காலியாக உள்ள இடத்தை, இப்பகுதி வாலிபர்கள், விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சிலர், சுற்றி கம்பி வேலி அமைத்து, ‘கேட்’ போடுவதற்கு பில்லர் அமைத்து, ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால், இப்பகுதி வாலிபர்கள் விளையாடுவதற்கு இடமின்றி தவிக்கின்றனர்.அரசு நிலத்தை வேலி அமைத்து, பில்லர் போட்டுப் பக்காவாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டரிடம் மூன்று முறை மனு கொடுத்துள்ளோம். பல்லாவரம் தாசில் தாரிடம் நேரில் சென்று புகார் தெரிவித்தோம். அப்படியிருந்தும் ஆக்கிரமிப்பை அகற்ற, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தாசில்தாருக்கு ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போது, ‘இதோ நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று கூறுகிறாரே தவிர, நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்து வருகிறார்.

யாருக்காக ஆக்கிரமிப்பை அகற்றாமல் உள்ளனர் என்று தெரியவில்லை.

இதுகுறித்து மீண்டும் சந்திப்போம்…