வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி குப்பத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை சார்பதிவாளர் (பொறுப்பு) கவிதா பணியாற்றி வந்தார்.
அப்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய லத்தேரியை சேர் ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் பணம் வாங்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து சார்பதிவாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
தற்போது வரை கவிதா சஸ்பெண்ட் ஆகி உள்ளார். இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய பணம் பெற் றதாக பெண் சார்பதிவாளர் கவிதா, கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு ஆகிய இரண்டு பேர் மீது வேலூர் விஜிலன்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளனர்.
இது குறித்து விஜிலன்ஸ் போலீசார் கூறியதாவது கே.வி குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் (பொறுப்பில்) கவிதா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பணியில் இருந்தார்.
அப்போது அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூபாய் 3.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 4 பத்திரங்களை பதிவு செய்துள்ளார்.
மீதமுள்ள 4 பத்திரங்களை பதிவு செய்ய மேலும் பணம் கேட்டபோது, பாபுவிடம் பணம் வாங்கிய வீடியோ வெளியானது. இதையடுத்து கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்வதற்காக ரூபாய் 3.50 லட்சம் பணம் வாங்கியதாக சார்பதிவாளர் கவிதா மற்றும் பணம் கொடுத்த பாபு ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.
நமது சிறப்பு நிருபர்
