என் பிறப்பும் வளர்ச்சியும் அரியலூர் மாவட்டத்தில். இன்று என் கண்முன்னே என் மாவட்டம் மெதுவாக அழிந்துகொண்டிருக்கிறது. என் மக்கள் கல்வியில் முன்னேறாமல், அப்பாவித்தனமாக வாழ்ந்து வருகின்றனர்.
இப்போது தான் படிப்பறிவு சிறிது சிறிதாகப் பரவி வருகிறது. ஆனால் மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், பலர் பிழைப்பிற்காகச் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே நிரந் தரமாகத் தங்கி வருகின்றனர். இங்கே தங்கி இருக்கும் மக்கள் கூட எப்போது எது நடக்கும் என்ற பயத்தோடு வாழ்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் தினந்தோறும் நடக்கும் சாலை விபத்துக்கள். விபத்துகளைக் குறைப்பதற்காக என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்காமல், பணம் கொடுப்போருக்கே வாக்களிப்பது நிலைமை இன்னும் மோசமாக்குகிறது. முதலில் திருந்த வேண்டியது நமது மக்கள் தான். விபத்து அதிகம் நடக்கும் சாலைகள் அரியலூர் மாவட்டத்தில், குறிப்பாகப் பைபாஸ் சாலை, செந்துறை சாலை, ஜெயங் கொண்டம் சாலை, தஞ்சாவூர் சாலை இந்தச் சாலைகளில் வாரத்திற்கு குறைந்தது ஐந்து விபத்துகள் நடைபெறுகின்றன. இதற்கு யாரையும் குறை கூற முடியாது. விபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
உடனடி தீர்வுகள் சென்டர் மீடியன் அமைத்தல் அரியலூர் பைபாஸ் சாலையும், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், செந்துறை சாலைகளிலும் முழுமையாகச் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும். இது நேருக்கு நேர் மோதல்களைப் பெருமளவில் தடுக்கும்.லாரிகளுக்கான கட்டுப்பாடு
இந்த மாவட்டத்துக்குத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான கனரக லாரிகள் வருகிறன. வெளி மாவட்டங்களிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கனிம வள மண்களை ஏற்றிக் கொண்டு வரும் இந்த லாரிகள் அதிகபட்ச பாரம் ஏற்றிப் பயணிப்பதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இதற்கு அரசு கண்டிப்பான கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கான ஓய்வு மையங்கள்
வெளி மாவட்டங்களிலிருந்து வரும் லாரி ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க சாலையோரம் யார்டு, கழிவறை வசதிகள் உடனடியாக அமைக்க வேண்டும். ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க முடியாததால் தான் பல விபத்துக்கள் நிகழ்கின்றன.
நேரில் கண்ட அனுபவம் சமீபத்தில் பெரம்பலூரிலிருந்து அரியலூரை நோக்கிப் பயணிக்கும்போது, என் காரின் முன்னால் அதிவேகமாகச் சென்ற ஒரு வாகனம் அரியலூர் ரயில்வே மேம்பாலத்தில் விபத்துக்குள்ளானது. அதில் ஒரு இருசக்கர வாகன ஓட்டிய உறவு மரண மடைந்தார் உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் கொடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு உதவி செய்தேன். ஆனால், சிலர் இதை அரசியல் குற்றச்சாட்டு எனத் தவறாக விளக்கினர். மக்களுக்குச் சேவை செய்வது என் கடமை. அதை வெளிப்படையாக விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
நீதிக்காகக் குரல்
திருவையாறு அருகே ஐந்தாம் மாதம் மணிகண்டன் என்ற ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் நீதியைப் பெறவில்லை. குடும்பத்தார் புகார் கொடுத்திருந்தாலும், முக்கிய குற்றவாளியைக் காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி தலைவரின் அழுத்தம் காரணமாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்ற குற்றச்சாட்டு நிலவு கிறது. குடும்பத்தாரிடம் சென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்காக வழக்கு தொடங்க அறிவுறுத்தியிருந்தேன். ஆனால் அவர்கள் ஒத்துழைக்கவில்லை.
முடிவுரை
மக்களின் உயிரைக் காக்க சென்டர் மீடியன் அமைத்தல், கனரக வாகன பாரம் கட்டுப்பாடு, ஓய்வு மையங்கள் உருவாக்கம் ஆகியவை உடனடியாகச் செய்யப்பட வேண்டும். இது அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்க முடியாத பொறுப்பு. என் மக்கள் உயிர் பிழைப்பதே என் ஒரே நோக்கம்.
அன்புடன்
S.பன்னீர்செல்வம்
(பொதுச்செயலாளர் “பூர்வீக தமிழர் கட்சி”)
